Skip to main content

நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்


நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்
3489. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்
"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஓர் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்' (திருக்குர்ஆன் 49:13) என்னும் இறைவசனத்தில் இடம் பெற்றுள்ள 'ஷுவூப் சமூகங்கள்' என்னும் சொல் பெரிய இனங்களையும் 'கபாயில் - குலங்கள்' என்னும் சொல், அந்த இனங்களில் உள்ள உட் பிரிவுகளையும் குறிக்கும்" என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Volume :4 Book :61
3490. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
"இறைத்தூதர் அவர்களே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?' என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், 'அவர்களில் இறையச்சமுடையவரே" என்று பதிலளித்தார்கள். மக்கள், 'நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை" என்றனர். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)" என்று கூறினார்கள்.
Volume :4 Book :61
3491. குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அவர்களிடம் நான், 'நபி(ஸல்) அவர்கள் 'முளர்' குலத்தைச் சேர்ந்தவர்களா என்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டதற்கு, 'முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் நள்ர் இப்னு கினானாவின் சந்ததிகளில் ஒருவராவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
Volume :4 Book :61
3492. குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் - அவர்கள் ஸைனப்(ரலி) என்று எண்ணுகிறேன் - எனக்கு அறிவித்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவையையும், மண்சாடியையும், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து  தயாரித்த) மரப் பீப்பாய்களையும், தார் பூசப்பட்ட பாத்திரங்களையும் (பயன்படுதத வேண்டாமென்று) தடைவிதித்தார்கள்.
நான் அவரிடம், 'நபி(ஸல்) அவர்கள் எந்தக் கோத்திரத்தவர்களாயிருந்தார்கள் என்று எனக்குத் தெரிவியுங்கள்; அவர்கள் முளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நள்ர் இப்னு கினானாவின் சந்ததிகளில் ஒருவராவார்கள்" என்று கூறினார்கள்.
Volume :4 Book :61
3493. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றால். இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் அவர்களில் அதிகமாக இதை வெறுப்பவர்கள் தாம்.
Volume :4 Book :61
3494. மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரண்டு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான்.
என அபூ ஹுரைரா(ரலி அறிவித்தார்கள்.
Volume :4 Book :61
3495. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் அனைவரும் இந்த (அட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்மாயிருப்பவர் குறைஷிகளில் முஸ்மாயிருப்பவரைப் பின்பற்றுபவராவார். மக்களில் உள்ள இறைமறுப்பாளர் குறைஷிகளில் உள்ள இறை மறுப்பாளரைப் பின்பற்றுபவராவார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :61
3496. மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மார்க்க அறிவைப் பெற்றால், இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் (வேறுவழியின்றி) சிக்கிக் கொள்ளும் வரை அதைக் கடுமையாக வெறுப்பவரையே மக்களில் சிறந்தவராக நீங்கள் காண்பீர்கள்.
Volume :4 Book :61
3497. தாவூஸ்(ரஹ்) அறிவித்தார்
"இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்த ஊதியத்தையும் நான் கேட்கவில்லை. ஆயினும், உறவுமுறையை நீங்கள் பேணி நடக்கவேண்டும் என்று விரும்புகிறேன்" என்னும் (திருக்குர்ஆன் 42:23) இறை வசனத்தைக் குறித்து (இதன் கருத்து என்ன என்று) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது (அங்கிருந்த) ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்), 'இதன் பொருள், 'ஆயினும் என் உறவினர்களிடம் நீங்கள் அன்பு பாராட்டவேண்டும் என்று விரும்புகிறேன்' என்பதாகும்" என்று பதிலளித்தார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) 'குறைஷிகளின் எந்தக் கிளைக் குலத்திற்கும் நபி(ஸல்) அவர்களுடன் உறவுமுறை இல்லாமல் இருந்ததில்லை. எனவே, '(குறைந்த பட்சம்) எனக்கும் உங்களுக்கும் இடையிலான அந்த உறவு முறையயாவது பேணி நடக்கும் படி உங்களைக் கேட்கிறேன்" என்னும் பொருளில் தான் இந்த இறைவசனம் அருளப்பட்டது" என்று பதிலளித்தார்கள்.
Volume :4 Book :61
3498. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இங்கிருந்து தான் - கிழக்கு திசையிலிருந்து தான் - குழப்பங்கள் தோன்றும் ஒட்டகங்கள் மற்றும் மாடுகளின் வால்களைப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருக்கும் (தங்கள் உலக வேலைகளில் மூழ்கியுள்ள) 'ரபீஆ' மற்றும் 'முளர்' ஆகிய குலங்களைச் சேர்ந்த கிராமவாசிகளான நாடோடிகளிடையே தான் கல்மனமும் கடின சித்தமும் காணப்படும்.
என அபூ மஸ்வூத் அல் அன்சாரி(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :61
3499. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருமையும் கர்வமும் கிராமவாசிகளான நாடோடிகளிடையே காணப்படும். ஆடு மேய்ப்பவர்களிடையே அமைதியும் பணிவும் காணப்படும். இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். மதி நுட்பமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.
அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்:
'யமன்' நாடு கஅபாவுக்கு வலப் பக்கம் அமைந்திருப்பதால் தான் அதற்கு 'யமன்'  என்று பெயரிடப்பட்டது. 'ஷாம்' நாடு கஅபாவின் இடப்பக்கம் அமைந்துள்ளது. 'மஷ்அமா' என்பதற்கு 'மய்ஸ்ரா' இடது என்று பொருள். இடக்கரத்திற்கு 'ஷுஃமா' என்பர். இடப் பக்கத்திற்கு 'அல் அஷ்அம்' என்பர்.
Volume :4 Book :61
3500. முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார்
முஆவியா(ரலி) அவர்களிடம் குறைஷிகளின் ஒரு தூதுக் குழுவில் ஒருவனாக நான் வருகை தந்திருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி), 'கஹ்தான் குலத்திலிருந்து மன்னர் ஒருவர் தோன்றுவார்" என்று அறிவிப்பதாகச் செய்தி வந்தது. முஆவியா(ரலி) கோபமடைந்து எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிப் படியுள்ள வர்ணனைகளால் புகழ்ந்துவிட்டு பின்னர், 'இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகிறேன். உங்களில் சிலர், அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத, அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கப்படாத செய்திகளைப் பேசுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறியாதவர்கள் ஆவர். வழி கெடுத்து விடுகிற வெற்று நம்பிக்கைகளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன் - ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும். அவர்களுடன் (அது தொடர்பாகப் பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டி வரும் வரை இந்நிலை நீடிக்கும்" என்று கூற கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.
Volume :4 Book :61
3501. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :61
3502. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) கூறினார்
நானும் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களும் நடந்து (நபி(ஸல்) அவர்களிடம் நீதி பெறச்) சென்றோம். உஸ்மான்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! முத்தலிபின் மக்களுக்கு நீங்கள் கொடுத்தீர்கள். எங்களைவிட்டு விடாதீர்களே! நாங்களும் அவர்களும் உங்களுக்கு ஒரே விதமான (உறவு) நிலையில் தானே இருக்கிறோம்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'பனூ ஹாஷிமும் (ஹாஷிம் கிளையாரும்) பனூ முத்தலிபும் (முத்தலிப் கிளையாரும்) ஒருவர் தாம் (வேறல்லர்)" என்று பதிலளித்தார்கள்.
Volume :4 Book :61
3503. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த சிலருடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள். ஆயிஷா(ரலி), பனூ ஸுஹ்ரா கிளையினருக்கு அல்லாஹ்வின் தூதருடன் இருந்த உறவு முறையின் காரணத்தால் அவர்களின் மீது மிகவும் இரக்கத்துடன் நடந்து கொள்வார்கள்.
Volume :4 Book :61
3504. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைஷிகளும், அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :61
3505. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்
ஆயிஷா(ரலி) அவர்களுக்கு, நபி(ஸல்) மற்றும் அபூ பக்ர்(ரலி) ஆகியோருக்கு அடுத்தபடியாக, (தம் சகோதரி அஸ்மாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) மீது எல்லா மனிதர்களை விடவும் அதிகமான பிரியம் இருந்தது. மக்களிலேயே அதிகமாக ஆயிஷா(ரலி) அவர்களுக்கு நன்மை புரியக் கூடியவராக அப்துல்லாஹ் இருந்தார். ஆயிஷா(ரலி), தம்மிடம் வருகிற அல்லாஹ்வின் கொடை எதையும் தன்னிடமே வைத்துக் கொள்ளாமல் தர்மம் செய்து விடுவது வழக்கம். எனவே, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), 'ஆயிஷா(ரலி) அவர்களின் கரத்தை (தர்மம் செய்ய விடாமல்) பிடித்துக் கொள்வது அவசியம்" என்று கூறினார்கள். அதனால் அவர்கள் (கோபமுற்று), '(தர்மம் செய்ய விடாமல்) என் கையைப் பிடித்துக் கொள்வதா? (இனி அப்துல்லாஹ்வுடன் பேச மாட்டேன்.) அவருடன் (என் சபதத்தை மீறி) நான் பேசினால் (சத்தியத்தை முறித்த குற்றத்திற்காக) நான் பரிகாரம் செய்ய நேரிடும்" என்று கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), (ஆயிஷா(ரலி) அவர்களின் கோபத்தைத் தணித்து அவர்களைத் தம்முடன் பேசச் செய்வதற்காக) (அன்னை) ஆயிஷாவிடம் தனக்காகப் பரிந்துரை செய்யும் படி குறைஷிகள் சிலரையும் குறிப்பாக, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தாய் மாமன்மார்களையும் கேட்டுக் கொண்டார்கள். (அவர்கள் பரிந்துரை செய்தும்) ஆயிஷா(ரலி) பேச மறுத்துவிட்டார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்து யகூஸ் மற்றும் மிஸ்வர் இப்னு மக்ரமா உள்ளிட்ட நபி(ஸல்) அவர்களின் தாய் மாமன்களான பனூ ஸுஹ்ரா கிளையினர் அப்துல்லாஹ்விடம், 'நாங்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டுக் கொண்டிருக்கும் போதே நீங்கள் திரையைக் கடந்து (அனுமதி பெறாமலே) சென்று விடுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும் செய்தார்கள். பிறகு (அயிஷா (ரலி) அவர்களும் ஒப்புக் கொண்டு பேசிவிட்டார்கள். அவர்களின் சத்தியம் முறிந்து போனதற்குப் பரிகாரமாக) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் பத்து அடிமைகளை (விடுதலை செய்வதற்காக) அனுப்பி வைத்தார்கள். அவர்களை ஆயிஷா(ரலி) விடுதலை செய்துவிட்டார்கள். பிறகு (இது போதுமான பரிகாரம் ஆகாதோ என்ற எண்ணத்தில்) தொடர்ந்து நாற்பது எண்ணிக்கையை அடையும் வரை அடிமைகளை விடுதலை செய்து கொண்டேயிருந்தார்கள். இறுதியில், நான் (அப்துல்லாஹ்வுடன் பேசமாட்டேன் என்று) சத்தியம் செய்த போதே, 'என் சத்தியம் முறிந்து போனால் அதற்குக் குறிப்பிட்ட பரிகாரத்தைச் செய்வேன்' என்று முடிவு செய்துவிட்டிருந்தால் அதை மட்டும் செய்து பொறுப்பிலிருந்து விடுபட்டிருப்பேன்" ("இன்ன பரிகாரம் என்று குறிப்பிட்டு முடிவு செய்யாததால் இவ்வளவு செய்தும் இந்த அளவு பரிகாரம் நிவர்த்தியானதோ இல்லையோ என்ற சந்தேகம் இன்னும் என்னை வாட்டுகிறது") என்று கூறினார்கள்.
Volume :4 Book :61
3506. அனஸ்(ரலி) அறிவித்தார்
உஸ்மான்(ரலி) (அன்னை ஹஃப்ஸாவிடமிருந்து குர்ஆன் பதிவுகளை வாங்கிவரச் செய்து) ஸைத் இப்னு ஸாபித், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு ஆஸ், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரை அழைத்து, (அவற்றைப் பிரதியெடுக்கப் பணித்தார்கள்.) அவர்கள் ஏடுகளில் அவற்றைப் பிரதியெடுத்தார்கள். உஸ்மான்(ரலி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித் தவிரஉள்ள) குறைஷிகளின் மூன்று பேர் கொண்ட அந்தக் குழுவிடம், 'நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஒரு (எழுத்து இலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே அதை எழுதுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷிகளின் மொழி வழக்கில் தான் இறங்கியது" என்று கூறினார்கள். அக்குழுவினரும் அவ்வாறே செய்தார்கள்.
Volume :4 Book :61
3507. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
அஸ்லம் கூட்டத்தார் கடைவீதியில் அம்பெறிந்து (விளையாடிக்) கொண்டிருக்கையில் (அவ்வழியாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டு வந்தார்கள். அதைக் கண்டதும், 'இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெறியுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை(யான இஸ்மாயீல் - அலை - அவர்கள்) அம்பெறிபவராக (வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவராக) இருந்தார்கள். 'நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்" என்று இருதரப்பினரில் ஒரு தரப்பாரைக் குறிப்பிட்டுக் கூறினார்கள். உடனே மற்றொரு தரப்பினர் (விளையாட்டைத் தொடராமல்) நிறுத்திவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவர்களுக்கென்ன நேர்ந்தது?' என்று கேட்க, அவர்கள், 'நீங்கள் இன்ன குலத்தாரோடு இருக்க, நாங்கள் எப்படி அம்பெறிவோம்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(தொடர்ந்து) அம்பெறியுங்கள். நான் உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கிறேன்" என்று பதிலளித்தார்கள்.
Volume :4 Book :61
3508. தன் தந்தை அல்லாத (ஒரு)வரை (அவர் தன் தந்தையல்ல என்று) விவரம் அறிந்து கொண்டே 'அவர்தான் என் தந்தை" என்று கூறும் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாகிறான். தனக்கு வமிசாவளித் தொடர்பு இல்லாத ஒரு குலத்தைக் குறித்து, தான், அந்தக் குலத்தைச் சேர்ந்தவன் தானென தன்னைப் பற்றிக் கூறிக் கொள்பவன், தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ தர்(ரலி) அறிவித்தார். 

Comments

Popular posts from this blog

ஈமான் கொண்டோம் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ............. எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்வில் நமக்கு நிறைய பாடங்களும், படிப்பினைகளும் இருக்கின்றன. அண்ணல் நபி [ஸல்] அவர்களை பின்பற்றுவதினால் தான் வெற்றி இருக்கு என்பதை நாம் உணர வேண்டும். அம்மார் இப்னு யாஸிர் [ரலி] , அவர்களது தகப்பனார் யாஸிர் , தாயார் ஸூமைய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹூதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர் .இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம்  'அப்தஹ் ' என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடுமணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர் . இதனைக் கண்ட நபி [ஸல்] அவர்கள்  ''யாஸிரின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள் . உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது'' என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவகர்களின் வேதனையாலேயே யாஸிர் [ரலி] இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்த இயலாதவராக இருந்த அம்மாரின் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் [ரலி] அவர்களை அபூஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டிய

உயர்ந்தோனை நோக்கி..... புறப்படுவதற்கான அறிகுறிகள்

அல்லாஹ்வின் திருபெயரால்...... எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! இந்த சம்பவம் ஒரு உருக்கமான சம்பவம் என்று கூறலாம்.......... நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. அழைப்புப் பணி நிறைவுற்று . இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி [ஸல்] அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன.

கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பு 57.  'நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்"ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :3 58.  (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்' என்றார். பின்னர் தொடர்ந்து, '(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்' என்றார். மேலும், 'நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்' என்றேன். அப்போது அவர்கள், 'முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்' என்று எனக